பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்கு துாத்துக்குடி துறைமுகத்தில் அமை கிறது துாத்துக்குடி துறைமுகத்தில் அமைக்க முடிவு
பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்கு துாத்துக்குடி துறைமுகத்தில் அமை கிறது துாத்துக்குடி துறைமுகத்தில் அமைக்க முடிவு
ADDED : ஆக 09, 2025 10:01 PM
துாத்துக்குடி:'துாத்துக்குடி துறைமுகத்தில் பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, துாத்துக்குடி துறைமுக ஆணைய துணை தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
துாத்துக்குடி, 'துடிசியா' அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வரும் தொழில் கண்காட்சியில் நேற்று பங்கேற்ற அவர் கூறியதாவது:
துாத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி விரைவில் துவங்க உள்ளது.
துறைமுகத்தில் பசுமை அமோனியா உற்பத்திக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வரும் 2029க்குள் 20 லட்சம் டன்னும், 2030க்குள் 50 லட்சம் டன்னும் பசுமை அமோனியா உற்பத்தி செய்யப்படும்.
பசுமை ஆற்றலுக்கான முக்கிய திட்டமாக பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்கு ஒன்றை துறைமுகத்தில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது வந்து விட்டால் கப்பல்களுக்கு பசுமை மெத்தனால் பயன்படுத்த முடியும்.
பசுமை எரிபொருளால் இயங்கக்கூடிய கப்பல்கள் எரிபொருள் நிரப்பக்கூடிய துறைமுகமாக துாத்துக்குடி துறைமுகம் உருவாகும். துறைமுகத்தில் ஏற்கெனவே சோலார் மற்றும் காற்றாலை மூலம் 6 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும், 6 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
14 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டதும், நாட்டிலேயே முதல் பசுமை துறைமுகமாக துாத்துக்குடி துறைமுகம் விளங்கும்.
துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் 1,800 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டும் தளம் தமிழக அரசுடன் இணைந்து அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.