கடலோர மண்டல ஆணையம் மீது பசுமை தீர்ப்பாயம் கடும் அதிருப்தி
கடலோர மண்டல ஆணையம் மீது பசுமை தீர்ப்பாயம் கடும் அதிருப்தி
ADDED : பிப் 14, 2024 01:54 AM
சென்னை:'புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்கும் பிரச்னையில், தீர்ப்பாயம் தெரிவித்த வழிகாட்டுதல்களை, நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையமான- என்.சி.எஸ்.சி.எம்., மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவை பின்பற்றவில்லை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
'கடந்த, 1996ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை அடிப்படையாக கொண்டு, புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்' என, சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவர், 2022ல் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'மழைநீர் கடலில் கலக்கும் இடங்கள், கடலோர பகுதிகளில் உள்ள சாலைகள் குறித்து, நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் வாயிலாக ஆய்வு நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'என்.சி.எஸ்.சி.எம்., உடன் இணைந்து, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கூட்டத்தை நடத்தி, கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தொடர்பாக, தீர்ப்பாயம் வழங்கிய வழிகாட்டுதல்களை, என்.சி.எஸ்.சி.எம்., மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவை பின்பற்றவில்லை.
'இது தொடர்பாக, வழக்கின் அடுத்த விசாரணை தேதியான, மார்ச் 13-ம் தேதிக்குள், இந்த இரு அமைப்புகளும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

