நடுக்குவாத பாதிப்புக்கு சிறந்த பலன் தரும் 'குரூப் தெரபி' நரம்பியல் துறை நிபுணர் லட்சுமி நரசிம்மன் தகவல்
நடுக்குவாத பாதிப்புக்கு சிறந்த பலன் தரும் 'குரூப் தெரபி' நரம்பியல் துறை நிபுணர் லட்சுமி நரசிம்மன் தகவல்
ADDED : ஆக 17, 2025 01:26 AM

சென்னை:“பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத பாதிப்புகளுக்கு அளிக்கப்படும், 'பிசியோதெரபி' சிகிச்சையில், கூட்டமாக செய்யும், 'குரூப் தெரபி'யான, 'மூவ்மென்ட் பார் மூவ்மென்ட்' சிறந்த பலனை அளிக்கிறது,” என, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் லட்சுமிநரசிம்மன் கூறினார்.
சென்னை அண்ணா சாலை, எம்.எம்.ஏ., கட்டட வளாகத்தில், 'நியூரோ இமேஜின் பவுண்டேஷன், ஆண்டர்சன் டயக்னஸ்டிக் சர்வீசஸ்' நிறுவனம் இணைந்து, நடுக்குவாத பாதிப்புக்கான மறுவாழ்வு பயிற்சி முகாமை நேற்று நடத்தின.
இதற்கு, சென்னை, கே.கே.நகர் புனர்வாழ்வு மைய இயக்குநர் பி.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். டாக்டர்கள் லட்சுமிநரசிம்மன், எம்.எம்.அருண் சிவராமன், குகன் ராமமூர்த்தி, ஆர்.ஸ்ரீவர்தன் ஆகியோர், நடுக்குவாதம் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும், 'பிசியோதெரபி' டாக்டர்கள் ஆர்.பிரசன்னா, ஆர்.அஸ்வின் ஆகியோர் அடங்கிய குழுவினர், நோயாளிகளுக்கு, 'பிசியோதெரபி' சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் லட்சுமி ந ரசிம்மன் கூறியதாவது:
பார்கின்சன் நோய் என்பது மூளையில், 'டோபமைன்' என்ற வேதிப்பொருள் குறைவால் ஏற்படுகிறது. இந்நோயால், ஒரு லட்சம் பேரில், 40 பேர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, 50 முதல் 70 வயது வரையிலானவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, இளம்வயதிலும் சிலர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நோய் பாதித்தவர்களுக்கு அடிக்கடி கீழே விழுதல், நடப்பதில், எழுதுவதில் தடுமாற்றம், நடக்கும்போது சிரமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதற்கு, ஒருசில சிகிச்சை முறைகள் இருந்தாலும், 'பிசியோதெரபி' சிகிச்சையும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த சிகிச்சையை தனியாக செய்வது தீர்வாக இருந்தாலும், அதை விட, 10க்கும் மேற்பட்டோ ருடன் இணைந்து, 'குரூப் தெரபி' ஆக செய்வது சிறந்த பலனை அளிக்கிறது.
இதற்காக, சென்னை கெஸ்ட் மருத்துவமனை, கோவை என்.ஜி., மருத்துவமனை, திருச்செந்துார் பி.ஜி., மருத்துவமனை ஆகியவற்றில் முகாம்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நடுக்குவாத நோயாளிகளுக்கும் ஒவ்வொரு பிசியோதெரபி நிபுணர் பயிற்சி அளித்தார்.
இந்த குரூப் தெரபி வாயிலாக, நடுக்குவாத நோயாளிகளுக்கும் உற்சாகம், ஊக்கம் அதிகரித்தது கண்டறியப்பட்டது. தனியாக செய்யப்படும்போது இருக்கும் ஒருவித சலிப்புத்தன்மை இல்லாமல், அனைவரும் உற்சாகத்துடன் செய்ததால், நோயில் இருந்து மீள்வதற்கான கால அளவு குறைகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற, 'குரூப் தெரபி' துவங்கப்பட்டு, நோயாளிகளிடையே ஊற்சாகத்துடன் கூடிய தீர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.