மாணவர்கள் தொழில்முனைவோராக வளர ஊக்குவிக்க வேண்டும் பிராமணர் சங்க வர்த்தக மன்ற துவக்க விழாவில் எச்.ராஜா பேச்சு
மாணவர்கள் தொழில்முனைவோராக வளர ஊக்குவிக்க வேண்டும் பிராமணர் சங்க வர்த்தக மன்ற துவக்க விழாவில் எச்.ராஜா பேச்சு
ADDED : செப் 07, 2025 01:17 AM

சென்னை:“மாணவர்களின் கல்வி காலக்கட்டங்களிலே தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்பது விதைக்கப்பட வேண்டும்,” உலக பிராமணர் சங்கத்தின் வர்த்தக மன்ற துவக்க விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசினார்.
உலக பிராமணர்கள் நல சங்கத்தின் பிராமணருக்கான எட்டாம் ஆண்டு வர்த்தக மாநாடு, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஜெ.டி., மஹாலில் நேற்று நடந்தது. விழாவில், சுந்தரம் பைனான்ஸ் அதிகாரி சுதர்ஷன் பேசியதாவது:
ஒரு சமுதாயம் தன்னை சரிசெய்து கொள்ள, ஐந்து விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னை மேம்படுத்துவது; தன் குடும்பத்தை மேம்படுத்துவது; தன்னை சார்ந்த சமுதாயத்தை மேம்படுத்துவது; அந்த சமுதாயத்தால் தேசத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்துவது; அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு செல்வது.
இவற்றுக்கு ஒரு செயல் திட்டம் அவசியம். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும், குடும்பத்தின் ஈடுபாடு அவசியம். நம் நாட்டில் சிறந்த தொழில்களை நடத்துபவர்களின் பிள்ளைகள் படித்து, வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதால், அந்த பெற்றோரின் தொழில் முடங்கிப்போகிறது. அவ்வாறு முடக்கமின்றி தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் பிறந்த கிராமம், நம் குலதெய்தவம், நம் ஊர் என்ற உணர்வு எப்போதும் வேண்டும். பிறந்த தலத்திற்கு முடிந்த சேவைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, வர்த்தகத்தில் சிறந்த சேவையாற்றிய எட்டு பேர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நேற்று மாலை, உலக பிராமணர் நல சங்கத்தின், 'வர்த்தக மன்றம்' துவங்கப்பட்டது. அதற்கான, 'லோகோ' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவன தலைமை மேலாண் இயக்குநர் முரளி மலையப்பன் பேசுகையில், “லோகோ சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் வர்த்தம் செய்தால் நியாயம், ஒழுங்கு, நேர்மை இருக்கும். அது அடுத்த, 30 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்,” என்றார்.
எம்.எம்., போர்ஜிங் நிறுவன தலைமை மேலாண் இயக்குநர் வித்யாசங்கர் பேசுகையில், “காயத்ரி மந்திரத்தை விட சிறந்த ஒரு மந்திரம் எதுவும் இல்லை. மூன்று வேளை சந்தியா வந்தனத்துடன், காயத்ரி மந்திரம் அவசியம் சொல்வது நல்ல சிந்தனைகள், புத்துணர்ச்சியை உருவாக்கும். நம்மையும், நம் குடும்பத்தையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும்,” என்றார்.
விழாவில் மணலி பெட்ரோகெமிக்கல் மேலாண் இயக்குநர் சந்திரசேகர், இலங்கை, கேபிடல் மகாராஜா குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதையடுத்து, சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் பஞ்சாபகேசன், மங்கள் தீப் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீமுகா நிறுவன மேலாண் இயக்குநர் ஹரிஹரன் ராமமூர்த்தி ஆகியோரை, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கவுரவித்தார்.
பின், அவர் பேசுகையில், “ஜாதி வெறி இருப்பது தவறு. ஆனால், ஜாதி உணர்வு இருக்க வேண்டிய ஒன்று. கலாசாரம், பண்பாடு, தொண்டு ஆகியவை கொண்டு செல்ல வர்த்தகம் மிக அவசியம். கல்லுாரி மாணவர்களுக்கு நாம் உந்து சக்தியாக விளங்க வேண்டும்,” என்றார்.
விழாவில், சங்கத்தின் தலைவர் சிவநாராயணன், துணை தலைவர் சிவகுமார், பொதுச்செயலர் சுந்தரம் சேஷாத்திரி, பொருளாளர் ஹரிபாஸ்கர், ஒருங்கிணைப்பு செயலர் விஜயகுமார், உறுப்பினர் நமஸ்தே கிருஷ்ணன், சிட்டி யூனியன் வங்கி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.