ஹரியானா எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி பட்டம் வழங்கினார்
ஹரியானா எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி பட்டம் வழங்கினார்
ADDED : நவ 08, 2025 05:09 AM

: ஹரியானா மாநிலம், சோனேபட் பகுதியில் இயங்கும் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மாணவ - மாணவியருக்கு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பாரிவேந்தர், ஹரியானா எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் ரவி பச்சமுத்து மற்றும் துணைவேந்தர் டாக்டர் பரம்ஜித் எஸ்.ஜஸ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்.டி., முடித்த 1,800 மாணவ - மாணவியருக்கு பட்டம், பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
கல்விப் பணியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது; ஆராய்ச்சி, புதுமை மற்றும் சமூக ஈடுபாட்டில் துடிப்பாகச் செயல்படுகிறது.
இன்று பட்டம் பெறும் மாணவ - மாணவியர், தங்கள் அறிவை, நேர்மை, புதுமை மற்றும் இரக்கத்துடன் பயன்படுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.
தலைமைத்துவம் என்பது, உங்களுக்காக நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள் என்பதில் மட்டுமல்ல; மற்றவர்களை எவ்வாறு மேம்படுத்துகிறீர்கள் என்பதிலும் உள்ளது. இதை மாணவ - மாணவியர் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், எஸ்.ஆர்.எம்., நிறுவனர் பாரிவேந்தர் பேசுகையில், ''எஸ்.ஆர்.எம்., தொலைநோக்கு பார்வையுடன் பயணித்து வருகிறது.
''எஸ்.ஆர்.எம்., எப்போதும் தரமான கல்வி, ஆராய்ச்சி, சிறப்பு மற்றும் சமூக தாக்கத்துக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுகிறது. ஹரியானா பல்கலையில் படித்த பட்டதாரிகளின் சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன்,'' என்றார்.
பல்கலை வேந்தர் ரவி பச்சமுத்து பேசுகையில், ''ஹரியானா பல்கலையில், எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் தலைவர்களை உருவாக்குகிறோம். மாணவ - மாணவியர் உலகளவில் சிந்திக்க வேண்டும்; உள்ளூரில் செயல்பட வேண்டும்,'' என்றார்
- நமது நிருபர் -.

