UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:36 PM
சென்னை: நில அபகரிப்பு புகாரை திரும்பப் பெறும்படி, புகார்தாரரை மிரட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில், விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனி, குமரன் காலனியில் 1,800 சதுர அடி நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்ததாக, சூர்யா என்பவர் அளித்த புகாரில், பால்துரை உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் முன்ஜாமின் கோரி பால்துரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகாரை திரும்பப் பெறும்படி சூர்யாவை, இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகவும், பால்துரையின் மனைவி அளித்த புகாரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பால்து ரையின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் முனிசேகர், ராஜேஷ் ஆகியோர் மீது சென்னை மாநகர காவல் கமிஷனர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்பேடு காவல் மாவட்ட எல்லைக்கு வெளியே, இணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, டிச., 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
