கோர்ட் சம்மன் அனுப்புவதில் அலட்சியம் பாளை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
கோர்ட் சம்மன் அனுப்புவதில் அலட்சியம் பாளை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 31, 2025 12:53 AM
சென்னை:தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியம். இவரது ஆதரவாளர்கள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகம் அருகே, மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி தாக்கியதாக கூறப்படுகிறது.
மதபோதகர் அளித்த புகாரில், ஞானதிரவியம் உட்பட, 33 பேர் மீது, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் மதபோதகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்தாண்டு நவம்பர் முதல் இம்மாதம் 21ம் தேதி வரை, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, பாளையங்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி, 'கடந்தாண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த சம்மனை, மார்ச் வரை வழங்காதது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற சம்மனை குற்றஞ் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்காத, பாளையங்கோட்டை காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மீது, டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், வழக்குப் பதிவு, குற்றப்பத்திரிகை தாக்கல், சம்மன் அனுப்பு வது, சாட்சிகள் பதிவு செய் வது போன்றவற்றில் தாமதம் செய்யக்கூடாது என, அனைத்து அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி., அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.
திருநெல்வேலி நீதிமன்றத்தில், வரும் செப்., 9ம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க., முன்னாள் எம்.பி., உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்.
ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும்.
புகார்தாரான மதபோதகருக்கு வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.