ADDED : செப் 02, 2025 05:08 AM
சென்னை: 'நீர்நிலைகளுக்கு, பொதுமக்கள் செல்வதை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில், மூளையை தின்னும் அமீபா தொற்றால், இரண்டு மாதங்களில் நான்கு பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த தொற்று பரவாமல் இருக்க, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
l பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், தேங்கி நிற்கும் நீர், மாசடைந்த நீரை, குளிக்க பயன்படுத்த வேண்டாம். இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
l குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை சுற்றி, சுகாதார சூழலை உறுதி செய்ய வேண்டும்
l நீச்சல் குளங்களில், சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நீச்சல் குளங்களில், குளோரின் பயன்பாட்டை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்
l நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
l அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், மூளையை தின்னும் அமீபா தொற்றின் அறிகுறிகளுடன் நோயாளிகள் வந்தால், அவர்களை உரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.