ஊதிய உயர்வு வழங்க கோரி சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்க கோரி சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 18, 2025 06:35 AM

சென்னை: விலைவாசிக்கு ஏற்ப, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, என்.எச்.எம்., எனப்படும், தேசிய சுகாதார திட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை ஓமந்துாரார் தோட்டம் சிவானந்தா சாலையில், தமிழ்நாடு என்.எச்.எம்., பணியாளர்கள் கூட்டமைப்பினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலர் பணி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து, அச்சங்க மாநில தலைவர் ராஜதுரை கூறியதாவது:
தேசிய சுகாதார திட்டத்தில், துாய்மை பணியாளர்கள் துவங்கி, மருத்துவ அலுவலர் பணியாளர்கள் வரை, 20,000க்கும் அதிகமானோர், பல்வேறு பிரிவுகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகின்றனர்.
இத்திட்டத்தில், மருத்துவ அலுவலரின் ஊதியம், 40,000 ரூபாய், துாய்மை பணியாளர்களின் ஊதியம், 8,500 ரூபாயாக உள்ளது.
இன்றைய விலைவாசி உயர்வில், குறைவான ஊதியத்தை வைத்து வாழ்க்கை நடத்துவது, மிகவும் சிரமமாக உள்ளது. கடந்த 2021 முதல் ஊதிய உயர்வு வழங்கவில்லை.
மகப்பேறு விடுப்பு எனவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோரை, காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்.
அதேபோல், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

