மோசமான வானிலை; தரை இறங்க முடியாமல் சென்னை வானில் வட்டமடிக்கும் விமானங்கள்!
மோசமான வானிலை; தரை இறங்க முடியாமல் சென்னை வானில் வட்டமடிக்கும் விமானங்கள்!
UPDATED : நவ 26, 2024 01:47 PM
ADDED : நவ 26, 2024 12:35 PM

சென்னை: சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால், வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, செங்கல்பட்டு காஞ்சிபுரம் , விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில், அண்ணா சாலை, வளசரவாக்கம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். சென்னையில் தற்போது மோசமான வானிலை நிலவுவதால் மும்பை, கோவை, டில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவிக்கின்றன.
10 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. விமான பயணிகளும், உறவினர்களும் அச்சம் அடைந்துள்ளனர். 'கவலை கொள்ளத் தேவையில்லை. வானிலை சரியான பிறகு, 10 விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரையில் வட்டமடித்த விமானம்!
ஹைதராபாத்தில் இருந்து 140 பயணிகளுடன் காலை 6.40க்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 8.05 மணிக்கு மதுரை ஏர்போர்ட்டில் தரை இறங்க வேண்டும். ஆனால் மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கருமேகங்களும் சூழ்ந்தன. மோசமான வானிலையால் ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.திருமங்கலம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ந்து வானில் வட்டமடித்தது.
8.10 மணிக்கு மேக கூட்டங்கள், கருமேகங்கள் சற்று விலகியதும் இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக 140 பயணிகளுடன் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.