வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : டிச 10, 2024 06:01 AM

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலுவடைய வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. இதையொட்டி, கடல் மட்டத்தில் இருந்து, 5.8 கி.மீ., உயரத்தில் வளி மண்டல சுழற்சியும் நிலவுகிறது.
இங்கு காணப்படும் குறிப்பிட்ட சில சாதக சூழல் காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, இன்று வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நாளை தமிழகம் மற்றும் இலங்கை கரையை நெருங்கலாம்.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை, இன்று முதல் தீவிரமடைய வாய்ப்புள்ளது. கடலோரம் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
இன்று
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான மஞ்சள், 'அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை
கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று, 12, 13ம் தேதிகளிலும் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.