26 மாவட்டங்களில்! கனமழை பெய்யும்: இன்று துவங்குகிறது வடகிழக்கு பருவ மழை
26 மாவட்டங்களில்! கனமழை பெய்யும்: இன்று துவங்குகிறது வடகிழக்கு பருவ மழை
UPDATED : அக் 15, 2025 11:59 PM
ADDED : அக் 15, 2025 11:37 PM

சென்னை: 'தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று வடகிழக்கு பருவ மழை துவங்குகிறது. பருவ மழை துவக்கமாக, 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கடந்த மே 24ல் துவங்கியது. இம்மழை இயல்பானதாக இருந்தது. இன்று தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை துவங்குகிறது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை எண்ணுாரில் 14 செ.மீ., மழை பதிவானது. மாநிலம் முழுதும் பரவலாக மழை பதிவாகி உள்ளது.
தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு பருவ மழை, இந்திய பகுதிகளில் இருந்து இன்று விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக காணப்படுகின்றன.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை இன்று துவங்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***