ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை
ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை
ADDED : ஜன 17, 2025 02:38 AM
சென்னை,:'ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நாளை (ஜன., 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில், அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம், நாலுமுக்கு, 12; காக்காச்சி, 11; மாஞ்சோலை, 9 செ.மீ., மழை பதிவானது. ராமநாதபுரத்தில் சில இடங்களில், 2 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், தெற்கு அரபிக்கடலில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், நாளை இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில், நாளை, நாளை மறுநாள், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.