ADDED : செப் 23, 2025 10:13 PM
சென்னை:கோவை, நீலகிரி மாவட்டங்களில், நாளை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டி, பையூர் ஆகிய இடங்களில் தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடகிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே, நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடக்கு ஒடிசா, மேற்கு வங்கத்தை ஒட்டி நிலவும் இந்த அமைப்பு, அடுத்த, 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.