புற்றுநோய் பாதித்த மகன் சிகிச்சைக்காக வேண்டுகோள் விடுத்த பெண்ணுக்கு உதவி
புற்றுநோய் பாதித்த மகன் சிகிச்சைக்காக வேண்டுகோள் விடுத்த பெண்ணுக்கு உதவி
ADDED : மார் 17, 2024 07:21 AM
சென்னை : 'நீங்கள் நலமா' திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின், அரசு நலத்திட்ட பயனாளிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளை தொடர்பு கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும், 'நீங்களும் நலமா' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 6ம் தேதி துவக்கி வைத்தார். அன்று பயனாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பரிசோதனை
அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல்வர் முகாம் அலுவலகத்தில் இருந்து, பல்வேறு பயனாளிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மகளிர் உரிமை திட்டத்தில் பயனடைந்துள்ள, அரியலுார் மாவட்டம் கோவிந்தபுதுாரைச் சேர்ந்த ராதிகாவை, முதல்வர் தொடர்பு கொண்டு பேசிய போது, மகளிர் உரிமைத் தொகை வழங்கியதற்காக, அவர் முதல்வருக்கு நன்றி தெரித்தார்.
அத்துடன், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ள, தன் ஏழு வயது மகனுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்ட முதல்வர், சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் உத்தரவின்படி, அரியலுார் மாவட்ட, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், மருத்துவக்குழு அவரது வீட்டிற்கு சென்று, ராதிகாவின் மகனுக்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டது.
நடவடிக்கை
மேலும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அவரது மருத்துவ தொடர் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும், சுகாதாரத்துறை வழியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் மோகன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

