ADDED : செப் 13, 2025 12:40 AM
சென்னை:கலவரத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிய, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மீட்டு வருவதற்கு, புதுடில்லி, தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய துாதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணியரை மீட்டு வர, அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.
நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த, 116 பேர் பத்திரமாக நேற்று முன்தினம் இந்தியா திரும்பினர்.
மேலும், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், தங்களது விபரங்களை தெரிவிக்கவும், தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில், 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 011 - 2419 3300 என்ற தொலைபேசி எண், 92895 16712 என்ற மொபைல் போன் எண் மற்றும் tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com ஆகிய மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

