தமிமுன் அன்சாரி நடத்திய செயற்குழு செல்லாது அறிவிக்க கோரி வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி
தமிமுன் அன்சாரி நடத்திய செயற்குழு செல்லாது அறிவிக்க கோரி வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி
ADDED : அக் 31, 2025 01:12 AM
சென்னை:  'மனித நேய ஜனநாயக கட்சிக்கு உரிமை கோரியும், அக்கட்சியின் தலைவரான தமிமுன் அன்சாரி நடத்திய செயற்குழு செல்லாது' என, அறிவிக்க கோரியும் வழக்கு தொடர,  கட்சியின் பொதுச் செயலர் ஹாரூன் ரஷீத்துக்கு அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மனித நேய ஜனநாயக கட்சி 2016ல் துவக்கப்பட்டது. அப்போது, கட்சியின் தலைவராக டி.கே.பஷீர் அகமது இருந்தார். கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில், நாகையில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார். வேலுாரில் போட்டியிட்ட, எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது தோல்வி அடைந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு அக்., 8ல் செயற்குழு, டிச., 24ல் பொதுக் குழு கூட்டங்கள் நடந்தன. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, தேர்தல் கமிஷனுக்கு, தமிமுன் அன்சாரி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு செல்லாது என, வழக்கு தொடர அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹாரூன் ரஷீது  வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அப்போது ஹாரூன் ரஷீது தரப்பில், 'தமிமுன் அன்சாரி, முழுமையாக கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, கட்சி தலைவர் பஷீர் அகமது ராஜினாமா செய்ததது போல், மோசடியாக ஆவணங்கள் தயாரித்து, செயற்குழு நடத்தி, புதிய நிர்வாகிகளை அறிவித்தது சட்ட விரோதம் என அறிவிக்கவே, வழக்கு தொடர அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
தமிமுன் அன்சாரி தரப்பில், 'மனித நேய ஜனநாயக கட்சியின் அங்கீகாரத்தை, தற்போது தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், 2023ம் ஆண்டில் ஹாரூன் ரஷீது, இடை நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் வழக்கு தொடர எந்த உரிமையும் இல்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,  'இவ்வழக்கின் முக்கிய நிகழ்வுகள், சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்குள் நடந்துள்ளதால், இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது.
'இரு தரப்பும் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுவதால், மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுகள், எதிர் மனுதாரர் தரப்பு எழுப்பும் ஆட்சேபனைகள் குறித்து, பிரதான வழக்கின் விசாரணை நடத்தி தான் முடிவு செய்ய முடியும்.
'எனவே, மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சார்பில் தமிமுன் அன்சாரியை எதிர்த்து வழக்கு தொடர, மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.

