கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க. சிறப்பு குழு! .. ஐ.ஜி., அஸ்ரா கார்கை நியமித்தது உயர் நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க. சிறப்பு குழு! .. ஐ.ஜி., அஸ்ரா கார்கை நியமித்தது உயர் நீதிமன்றம்
UPDATED : அக் 03, 2025 11:52 PM
ADDED : அக் 03, 2025 11:22 PM

சென்னை : கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.
இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சி களின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
11 நிபந்தனைகள்
அப்போது, மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, ''கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க., தலைவர் விஜய் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. இது, அரசியல் காரணம்.
''சரியான திட்டமிடல் இல்லாமல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் கவனக் குறைவால், துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு, த.வெ.க., முழு பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதாடியதாவது:
வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கும் வரை, எந்த கட்சிக்கும், 'ரோடு ஷோ' மற்றும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படாது என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
த.வெ.க., தரப்புக்கு, 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், பொது நிபந்தனைகளில் ஒன்றிரண்டை மட்டுமே பூர்த்தி செய்து உள்ளனர்; மற்றவற்றை பின்பற்றவில்லை. மதியம் 3:00 முதல் இரவு 7:00 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டது.
ஆனால், த.வெ.க., அதிகாரப்பூர்வ சமூக வலை தளத்தில் நிகழ்ச்சி, பகல் 12:00 மணிக்கு துவங்கும் என்று பதிவிட்டனர்.
புலன் விசாரணை
இதை நம்பி, மக்கள், கட்சி தொண்டர்கள் அதிகாலை முதல் குவியத் துவங்கினர். சரியான நேரத்தை குறிப்பிடாமல், கட்சி தொண்டர்கள், பொது மக்களை தவறாக த.வெ.க., வழிநடத்தி உள்ளது.
முதலில் டிசம்பர் மாதத்தில் பிரசார கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். திடீரென செப்., 27ல், கரூர், 'லைட் ஹவுஸ் ரவுண்டானா' பகுதியில் பிரசாரத்துக்கு அனுமதி கோரினர் .
மூன்று இடங்களை குறிப்பிட்டு அனுமதி கோரியதில், பிரசாரம் நடந்த இடம் சிறந்தது என்று கருதி, போலீசார் அனுமதி அளித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, செப்., 26ல் அதே இடத்தில் நடத்திய கூட்டத்துக்கு, 137 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், த.வெ.க., நிகழ்ச்சிக்கு, 559 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் வாதாடினார்.
காவல் துறை தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதாடியதாவது:
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. த.வெ.க., கரூர் மாவட்ட செயலர் மதியழகன், நகர செயலர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த், துணை பொதுச் செயலர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி உள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது . இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, நீதிபதி என்.செந்தில்குமார் கூறியதாவது:
ஒரு மனிதனாக, கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களை பார்க்கும் போது, வேதனை அளிக்கிறது.
இச்சம்பவத்தில், இதுவரை இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; அனைத்தையும் அனுமதித்து உள்ளீர்கள். இதற்கு யார் பொறுப்பு?
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, கட்சியின் தலைவர் சென்று விட்டார். பொது மக்களுக்கு உதவ யாரும் இல்லை. காவல்துறை கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என, அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர்.
நடிகர் விஜய் பயணித்த பிரசார வாகனம் மோதி, விபத்து ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா; வழக்கு பதிவு செய்ய என்ன தடை; காவல்துறை தன் கைகளை கழுவி விட்டதா?
பறிமுதல் செய்ய வேண்டாமா ?
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பிரசார வாகனம் மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால், மக்கள் எப்படி நம்புவர்? வழக்குப்பதிவு செய்து, பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இந்த விஷயத்தில், நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இதை கண்மூடி, நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது; பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. துரதிருஷ்டவசமான இந்த நிகழ்வை, உலகமே கண்டுள்ளது.
போதுமானது அல்ல
உயிரிழந்தவர்களுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது, காவல் துறை இவ்விவகாரத்தில் தற்போது வரை எடுத்துள்ள நடவடிக்கை போதுமானது அல்ல. கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு, சம்பவ இடத்தில் இருந்து ஓடிய, த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை; சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை.
த.வெ.க., மற்றும் அதன் தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் இந்த செயலுக்கு, நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை, இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், உடனே சிறப்பு புலனாய்வு குழு வசம், கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆதவ் மீது நடவடிக்கை : நீதிமன்றம் உத்தரவு
வன்முறையை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட, ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை குழு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, 'இலங்கை, நேபாளத்தைப்போல் புரட்சி வெடிக்கவேண்டும்' என, சமூக வலைதளத்தி பதிவிட்டிருந்தார்.
தேச பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை துாண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆதவ் அர்ஜுனா மீது, ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இம்மனு செல்லத்தக்கதல்ல' என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆதவ் அர்ஜுனாவின் பதிவுகளும், நீதிபதியிடம் காட்டப்பட்டன.இதையடுத்து, 'ஒரு சிறிய வார்த்தையும் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின், நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவு:ஆதவ் அர்ஜுனா புரட்சி ஏற்படுத்துவதுபோல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் விஷயத்தில் பொறுப்பற்ற பதிவுகள் மீது, போலீசார் கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.