பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்ட ஐகோர்ட் தடை
பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்ட ஐகோர்ட் தடை
UPDATED : ஜூலை 01, 2025 04:38 AM
ADDED : ஜூலை 01, 2025 12:21 AM

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது.
மதுரை மாவட்டம், ஏழுமலை ராம ரவிகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம், ஒட்டன்சத்திரம் அருகே கொத்தப்புள்ளியில் உள்ளது. இங்கு கோவில் நிதி மூலம், 9 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி, அறநிலையத் துறை 2024 செப்., 26ல் அரசாணை வெளியிட்டது. இது, அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது.
அறநிலையத் துறை கமிஷனரின் முன் அனுமதியுடன் கோவிலின் உபரி நிதியை அறங்காவலர்கள் பயன்படுத்த வேண்டும். நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல்.
ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோவில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரியை நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல்.
பக்தர்களின் நலனுக்கான மருத்துவமனைகள், மருந்தகங்களை நிறுவுதல் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அறநிலையத் துறை முதன்மை செயலர், கமிஷனர், பழனி கோவில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதுபோல் நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இரு வாரங்களில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.

