அதிக நாள் விடுமுறையை அனுபவிக்கும் ஆசிரியர்கள் உயர்நீதிமன்றம் கருத்து
அதிக நாள் விடுமுறையை அனுபவிக்கும் ஆசிரியர்கள் உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : ஆக 30, 2025 11:46 PM
மதுரை:'மற்ற துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களை விட அதிக விடுமுறைகளை ஆசிரியர்கள் அனுபவிக்கின்றனர்' என கருத்து பதிவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடமாறுதலுக்கு எதிராக தலைமையாசிரியை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
விருதுநகர் மாவட்டம், தைலாபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இடமாற்றம் என்பது பணி நிபந்தனையாகும். நிர்வாக ரீதியான இடமாற்றங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. புகார்களின் அடிப்படையில் ஒரு பணியாளரை ஒழுங்கு நடவடிக்கைக்கு பதிலாக இடமாற்றம் செய்யலாம். இடம் அல்லது பதவி என்பது ஒருபோதும் ஒரு பணியாளரின் விருப்பமாக இருக்க முடியாது. ஒரு ஊழியர், மக்கள், பள்ளி மாணவர்களின் நலனுக்காக, அவர் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் பணிபுரிய வேண்டும்.
வரி செலுத்துவோரின் பொது நிதியிலிருந்து கல்வி துறையிலுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் மற்ற துறைகளின் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை விட, அதிக விடுமுறைகளை அனுபவிக்கின்றனர்.
ஆசிரியர் பணி உன்னதமானது. குழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில் உள்ளது.அவர்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். மனுதாரர் அருகிலுள்ள மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். திருமங்கலம் மற்றும் தைலாபுரம் இடையேயான துாரம் 50 கி.மீ., தான் என அவரது தரப்பு தெரிவித்தது. மனுவை ஏற்றுக்கொள்வதற்கு மனுதாரர் சட்டப்பூர்வ உரிமையை நிறுவவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

