திருச்சி ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் ஆட்டோக்களுக்கு உரிமத்தை ரத்து செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
திருச்சி ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் ஆட்டோக்களுக்கு உரிமத்தை ரத்து செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : மே 08, 2025 12:32 AM
மதுரை:திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட ஆட்டோக்களுக்கு வழங்கிய புது உரிமங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்சி மாரிமுத்து தாக்கல் செய்த மனு: திருச்சி ரயில் நிலையத்திற்குள் சென்றுவர சில ஆட்டோக்களுக்கு உரிமங்களை கோட்ட ரயில்வே மேலாளர், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் வழங்கியுள்ளனர். இது குழப்பத்திற்கு வழிவகுக்கும். 2024 மார்ச் 31 மற்றும் அதற்குப் பின் ஆட்டோ உரிமையாளர்களுக்கு வழங்கிய புது உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: ஏற்கனவே உள்ள உரிமதாரர்களுக்கு உரிமங்களை நீட்டிக்கவில்லை என்றாலும், புது நபர்களுக்கு உரிமங்களை வழங்குகின்றனர். இது மனுதாரர் போன்றவர்களின் உரிமைகளை பாதிக்கிறது.மத்திய அரசு தரப்பு: புது ரயில்கள் மற்றும் வழித்தடங்களை அறிமுகப்படுத்தியதால் உரிமங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பயணிகள் வந்து செல்வது அதிகரித்துள்ளது. பழைய, புதிய உரிமதாரர்களுக்கு இடையே பாகுபாடு காண்பிக்கவில்லை. ஏற்கனவே வழங்கிய 8 உரிமங்களுடன் கூடுதலாக 61 புது உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பழைய உரிமதாரரும் தனது உரிமத்தை புதுப்பிக்கவில்லை எனில் கோட்ட ரயில்வே மேலாளர், முதுநிலை கோட்ட வணிக மேலாளரை அணுகலாம். சாதகமாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: மனுதாரர் ரயில்வேயிடம் உரிமம் பெற்றவர். அவர் ஒரு தனித்துவமான உரிமதாரர் அல்ல. திருச்சி ரயில் நிலைய சந்திப்பில் ஆட்டோக்கள் நுழைய, பயணிகளை ஏற்றி, இறக்கிவிட அனுமதிக்கும் உரிமங்களை ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது.
மனுதாரருக்கு எந்தவொரு பிரத்யேக உரிமமும் இல்லாதபோது, மற்றவர்களுக்கு உரிமங்களை வழங்குவதை தடுக்க அவர் உத்தரவு கோர முடியாது. உரிமதாரர் என்ற முறையில், மூன்றாம் தரப்பினருக்கு புது உரிமங்களை வழங்குவதை தடுக்க முடியாது. ரயில் நிலைய பொறுப்பாளர்களான கோட்ட மேலாளர், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் உரிமம் வழங்க விரும்புகின்றனரா, இல்லையா என்பது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது.
இது ரயில் நிலையத்தின் பயன்பாடு, கடந்து செல்லும் மற்றும் நிற்கும் ரயில்களின் எண்ணிக்கை மற்றும் மக்களின் நடமாட்டத்தைப் பொறுத்தது. கொள்கை முடிவாக இருப்பதால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்கும் நிலையில் நான் இல்லை. மத்திய அரசு தரப்பு,'எந்தவொரு பழைய உரிமதாரரும் விடுபட்டிருந்தால் அதிகாரிகளை அணுகலாம்.
உரிமம் கோரும் விண்ணப்பத்தை அவர்கள் சாதகமாக பரிசீலிப்பார்கள்,' என தெரிவித்ததை பதிவு செய்து, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.