காற்றாலைகளை மூட தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட் தள்ளுபடி
காற்றாலைகளை மூட தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட் தள்ளுபடி
ADDED : ஜூன் 21, 2025 11:39 PM
மதுரை:துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளை மூட உத்தரவிட தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கோவில்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:
துாத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள், குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட காற்றாலைகளை அகற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்ட தனிநபர்கள், விவசாய நில உரிமையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்று வழங்க வேண்டும். காற்றாலைகளில் நிறுவப்பட்டுள்ள டர்பைன்ஸ் எனும் இறக்கைகளால் ஒலி மாசுபடுகிறது.
இம்மாவட்டத்தில்உள்ள அனைத்து காற்றாலைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக தலைமை செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'நீர் சட்டம் மற்றும் காற்று சட்டப்படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து காற்றாலைகள் ஒப்புதல் பெற வேண்டியதில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
காற்றாலைகள், பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யும் பிரிவின் கீழ் வருகின்றன. இவ்வழக்கு அடிப்படையில், காற்றாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்க இயலாது.
ஏதேனும் கடும் மாசு அல்லது விதிமீறல்கள் ஏற்பட்டால், சட்ட விதிகளின்படி மனுதாரர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுக உரிமை உண்டு. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.