ஓ.டி.டி., தளத்தில் சினிமா, தொடர்களை தணிக்கை செய்ய கோரி வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஓ.டி.டி., தளத்தில் சினிமா, தொடர்களை தணிக்கை செய்ய கோரி வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : செப் 26, 2024 02:24 AM

மதுரை:ஓ.டி.டி., எனும் 'ஓவர் த டாப்' என்ற முறையில், செயலி வாயிலாக இயங்கும், இணைய வழி பொழுதுபோக்கு தளத்தில் வெளியாகும் சினிமா மற்றும் தொடர்களை ஒழுங்குபடுத்த, அவற்றை தணிக்கை செய்ய தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த ஆதிசிவம் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்களில் வன் முறை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
கட்டுப்பாடு, தணிக்கை இல்லை. இதைக் காணும் இளைஞர்களுக்கு மனநலம், உளவியல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. தணிக்கை செய்து கட்டுப்படுத்தாவிடில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
ஓ.டி.டி., தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த தணிக்கை செய்து வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணி யன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலர், திரைப்பட தணிக்கைக்குழு தலைவர், தமிழக உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.