அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு
ADDED : ஜூலை 12, 2025 03:13 AM
சென்னை: 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது, எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, வரும் 21ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷனுக்கு காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வில் நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனிசாமி தரப்பில், 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னும், அதுதொடர்பாக எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை.
தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் கமிஷன் தரப்பில், 'ஆறு புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'அரசியல் சாசன அமைப்பான தேர்தல் கமிஷன், உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால், தன் அரசியல் சாசன கடமையை செய்ய தவறுவதாக கருதப்படும் அல்லவா.
இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டுவதைப் போல தெரிகிறது. ஜனாதிபதிக்கே உச்ச நீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில், தேர்தல் கமிஷன் என்ன அவரை விட உயர்ந்ததா' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன் தரப்பு, 'அரசியல் சாசனத்தில் உயர்ந்த, தாழ்ந்த அதிகாரி என எதுவும் இல்லை. அரசியல் சாசனத்தில் அனைத்து அதிகாரிகளும் சமமானவர்கள்.
இந்த விவகாரத்தில், எப்போது முடிவெடுக்கப்படும் என அதிகாரிகளை கேட்டு தெரிவிக்கப்படும்' என உறுதியளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என, காலவரம்பை குறிப்பிட்டு, எழுத்துப்பூர்வமான விளக்கத்தை, தேர்தல் கமிஷன் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்; வழக்கை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.