கருத்து சுதந்திரம் மத உணர்வை புண்படுத்தாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
கருத்து சுதந்திரம் மத உணர்வை புண்படுத்தாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 09, 2025 05:12 AM
மதுரை: கருத்து சுதந்திரம் என்பது மத உணர்வுகளை புண்படுத்துவதாக மாறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சதீஷ்குமார் என்பவர் கடவுள் கிருஷ்ணர் குறித்து பேஸ்புக்கில் அவதுாறான கருத்துக்களை பதிவிட்டதாக பரமசிவன் என்பவர் துாத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். விசாரணையை முடித்து கண்டுபிடிக்க முடியவில்லை என துாத்துக்குடி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 'தனிநபர் வழக்கு தொடரலாம். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது. அதை எதிர்த்து பரமசிவன் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு: போலீசார் முறையாக விசாரணையை மேற்கொள்ளவில்லை. பேஸ்புக் அதிகாரிகளிடமிருந்து தகவல்களைக் கோருவதற்கு மட்டுமே விசாரணையை பயன்படுத்தியுள்ளனர். சதீஷ் குமாரின் பேஸ்புக் பக்கத்தில் கல்வி, பணி, முகவரி மற்றும் போட்டோ விபரங்கள் உள்ளன. இவற்றை அரசு தரப்பு துல்லியமாக சரிபார்க்கவில்லை அல்லது அவ்வாறு செய்யாததற்கான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இப்பதிவு சட்டம்- ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறனைக் கொண்டது என்பதை விசாரணை அதிகாரி அடையாளம் கண்டிருந்தாலும், விசாரணையை மேலும் தொடரவில்லை. இறுதி அறிக்கை இயந்திரத்தனமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியாயப்படுத்த முடியாது ஹிந்து கடவுள்களை அவதுாறாக சித்தரித்து, வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. இத்தகைய செயல்கள் பகைமை, மத ரீதியான கோபத்தை ஏற்படுத்தி, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மதச் சின்னங்கள் மற்றும் கடவுள்கள் மீது ஆழமாக மரியாதை வேரூன்றியுள்ளது. அதை அவமதிப்பது சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற சித்தரிப்புகளை தீவிரமாக அணுகுவது அவசியம். கருத்து சுதந்திரம் என்பது மத உணர்வுகளை புண்படுத்துவதாக மாறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கோபியர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஆடைகளை கிருஷ்ணர் மறைத்த கதை பெரும்பாலும் ஒரு குறியீட்டு கதையாகக் காணப்படுகிறது.
ஆடைகளால் குறிக்கப்படும் பொருள் உலகத்தின் மீதான அவர்களின் பற்றுதலைக் குறிக்கிறது. அதேநேரத்தில் நதி நீர் உலக உடலைக் குறிக்கிறது. தெய்வீக உருவமான கிருஷ்ணர், தம் மீதான பக்தி மூலம் உலகப் பற்றுகளைத் தாண்டிச் செல்ல முடியுமா என்பதை சோதிக்கிறார். இக்கதை ஆன்மிக நாட்டம் மற்றும் பற்றின்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
பேஸ்புக்கில் சித் தரிப்பு மற்றும் கருத்துகள் வரம்புகளை மீறியுள்ளன. பதிவுகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தன. இது சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தது. குற்றச்சாட்டுகளில் தீவிரத்தன்மை இருந்தபோதிலும், வழக்கை போலீசார் சாதாரணமாகக் கையாண்டனர். விசாரணையை நிறுத்திவிட்டு, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என முடித்துவிட்டனர்.
போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. போலீசார் விசாரணையைத் தொடர்ந்து 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.