வனப்பகுதியில் கனிம திருட்டு வழக்கு தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
வனப்பகுதியில் கனிம திருட்டு வழக்கு தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 26, 2025 04:47 AM
மதுரை: மதுரை அழகர்மலை, திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் வழக்கு தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேலுார் புலிப்பட்டி தேவமூலி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாவட்டம் அழகர்மலை, திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை, சிறுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள நிலத்தில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளுகின்றனர். இதில் அரசியல் செல்வாக்குள்ள நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை வளம் அழியும். மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க மதுரை, திண்டுக்கல் கலெக்டர்கள், வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சேகர் ஆஜரானார்.
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பதில் மனு:அழகர்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மருத்துவ குணமுள்ள மரங்கள், மூலிகைச் செடிகள், வேறு சில வகை மரங்கள் உள்ளன. அங்கு மணல் அள்ள குவாரி நடத்த அனுமதி வழங்கவில்லை. சட்டவிரோதமாக மணல் குவாரி எதுவும் இல்லை. மரங்களை வெட்டுதல் அல்லது வனத்திற்கு எதிரான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வனப்பகுதிகளை இந்திய வனச் சட்டம், விதிகளின்படி அதிகாரிகளால் பாதுகாக்க வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்தால் அல்லது அது தொடர்புடைய செயல்பாடுகள் நடந்தால் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு தொடர வேண்டும். இது அதிகாரிகளின் கடமை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.