விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள், தேவாலயம் கோவில்களுக்கு கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள், தேவாலயம் கோவில்களுக்கு கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 24, 2024 06:13 AM
சென்னை: விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் போன்றவற்றுக்கு கருணை காட்ட முடியாது' என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்துாரில் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு, கூடுதலாக இரண்டு தளங்களை கட்டியுள்ளது.
1,500 மாணவர்கள்
இந்த விதிமீறல் தொடர்பாக, பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளி நிர்வாகம் தரப்பில், '1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். வரன்முறைப்படுத்த கோரி அளித்த விண்ணப்பமும் அரசிடம் நிலுவையில் உள்ளது. சென்னை தி.நகரில் ஏராளமான விதிமீறல் கட்டடங்கள் உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.
அரசு கூடுதல் பிளீடர் ஆர்.குமரவேல், ''அனுமதிக்கப்பட்ட திட்டத்தை மீறி, இரண்டு தளங்கள் கட்டப்பட்டு உள்ளன. கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களும் விதிமீறல்கள்,'' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த கோரி அளித்த விண்ணப்பம், அரசிடம் நிலுவையில் உள்ளது என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விதிமீறல் செய்பவர்கள், அனுமதிக்கப்பட்ட திட்டத்தை மீறி கட்டுவதும், அதன்பின், அதை வரன்முறைப்படுத்த அளித்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக கூறுவதும் வாடிக்கையாகி விட்டது.
சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக பகுதிகளில் ஒன்று தி.நகர். அங்கு பல விதிமீறல் கட்டுமானங்கள் உள்ளன. அத்தகைய விதிமீறல் கட்டடங்கள் மிகவும் குறைந்தளவே அகற்றப்பட்டு உள்ளன. தி.நகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
ஏப்ரல் வரை சலுகை
பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள், மருத்துவமனைகள் விதிமீறல் செய்தால், அது குற்றம் தான்; இதில், எந்த கருணையும் காட்ட முடியாது.
கருணை காட்டினால், அது தவறான போக்குக்கு காரணமாக அமைந்து விடும். அது மட்டுமின்றி, கருணை என்ற அடிப்படையில், சட்ட விரோத கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்க வழிவகுக்கும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேநேரம், நடப்பு கல்வியாண்டு முடிவடையும், 2025ம் ஆண்டு ஏப்ரல் வரை, பள்ளி மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இந்த அளவுக்கு மட்டுமே இந்த நீதிமன்றம் கருணை காட்ட முடியும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.