அனுமதி பெறாமல் கட்டடங்கள் உருவாவதை தடுத்தாக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
அனுமதி பெறாமல் கட்டடங்கள் உருவாவதை தடுத்தாக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 07, 2024 02:07 AM
மதுரை:'எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உயர்நிலைக்குழு உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென் மாவட்டங்களில் விதி மீறல் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, பல வழக்குகள் தாக்கலாகின.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனுமதியற்ற கட்டடங்களை அகற்றக்கோரி அல்லது அனுமதிக்கு புறம்பாக விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்டது தொடர்பாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
துாக்கத்தில் அதிகாரிகள்
இந்த நீதிமன்றம், பல சந்தர்ப்பங்களில் பிரச்னையை தீவிரமாக எடுத்து, அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தங்கள் அதிகார வரம்பிற்குள் அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துாக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து அகற்ற, உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
அடுத்த விசாரணையின் போது,'சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க அம்மாநகராட்சி கமிஷனர் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என அரசு தரப்பில் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதுபோல பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பாக அரசாணை பிறப்பிக்க தமிழக அரசிற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
மீண்டும் விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.தனபால் அமர்வு:
சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற, விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக்குழு அமைத்து, மார்ச் 1ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை குழு
இக்குழு வழிகாட்டுதல்கள், நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையெனில் உயர்நிலைக்குழுவை அமைத்ததன் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும்.
சட்ட விரோதமாக கட்டப்படும் கட்டடங்களை வாங்கும் அப்பாவிகள் நேர்மையற்ற நபர்களால் பாதிக்கப்படுவர். எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எதும் நடைபெறாமல் இருப்பதை உயர்நிலைக்குழு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

