சீமான் மீதான அவதுாறு வழக்கு; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
சீமான் மீதான அவதுாறு வழக்கு; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ADDED : நவ 28, 2025 07:05 AM

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, திருச்சி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதுாறு வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார், தன்னை பற்றியும், குடும்பத்தினர் பற்றியும் அவதுாறாக கருத்து வெளியிட்டதாக, சீமான் மீது திருச்சி 'ஜெ.எம்., 4' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி எல்.விக்டோரியா கவுரி நேற்று பிறப்பித்த உத்தரவு:
அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினால் பிரச்னை இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க, அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் கீழமை நீதிமன்றங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

