ADDED : ஏப் 02, 2025 04:02 AM

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
காங்., - முனிரத்தினம்: சோளிங்கர் தொகுதி, ராணிபேட்டை மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ளது. இங்குள்ள மாணவர்கள் சட்டம் படிப்பதற்கு, வேலுாருக்கும், சென்னைக்கும், ஆந்திர மாநிலம் சித்துாருக்கும் செல்கின்றனர்.
எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே காவிரிபாக்கத்தில், புதிய அரசு சட்ட கல்லுாரியை அமைக்க வேண்டும். சோளிங்கர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போதிய இடவசதி உள்ளதால், சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: சோளிங்கரில் இருந்து, 40 கி.மீ.,யில் காட்பாடியில், வேலுார் அரசு சட்ட கல்லுாரியும், 52 கி.மீ.,யில் பட்டரை பெரும்புதுாரில், அரசு சட்ட கல்லுாரியும் இயங்கி வருகின்றன. இங்கு, மூன்று மற்றும் ஐந்தாண்டு சட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. போதிய அளவில் இடங்கள் இருக்கின்றன.
எனவே காவிரிபாக்கத்தில் சட்ட கல்லுாரி துவங்க வாய்ப்பில்லை. சார்பு நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றத்தையும், அரசால் தனியாக முடிவெடுத்து அமைக்க முடியாது. உயர் நீதிமன்ற பரிந்துரை பெற்று, நிதி ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே, புதிய நீதிமன்றங்களை அமைக்க முடியும்.
சோளிங்கரை பொறுத்தவரை உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தால், நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.