அரசு ஊழியரின் சொத்து, கடன் விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
அரசு ஊழியரின் சொத்து, கடன் விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
ADDED : டிச 24, 2024 06:14 AM
சென்னை: 'அரசு ஊழியரின் சொத்து மற்றும் கடன் விபரங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம்; பொதுமக்களின் பரிசீலனையில் இருந்து அவற்றை பாதுகாக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கிருஷ்ணகிரி தாலுகாவில், நீர்த்தேக்க திட்டத்தின் உதவி பொறியாளராக பணியாற்றும் காளிபிரியன் என்பவரது சொத்து விபரங்களை கேட்டு, நீர்வளத்துறை பொதுத்தகவல் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன்; தகவல் வழங்கவில்லை.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் முறையீடு செய்தேன்; அவரும் தகவல் அளிக்கவில்லை. பின், மாநில தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தேன்; அவரிடம் விசாரணைக்காக ஆஜரானேன்.
அதைத்தொடர்ந்து, ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி, தனிநபரின் சொத்து விபரங்கள் அவரது தனிப்பட்ட தகவல் என்பதால், அந்த விபரங்களை வழங்க முடியாது என, பொது தகவல் அதிகாரி கூறினார். அரசு ஊழியரின் சொத்து விபரங்கள் பெற, சட்டத்தில் விலக்கு அளிக்கப்படவில்லை. மாநில தகவல் ஆணையர், நான் கேட்ட தகவலை வழங்கும்படி உத்தரவிடவில்லை.
அரசு ஊழியரின் சொத்து விபரங்களை வழங்கும்படி, மாநில தகவல் ஆணையர் உத்தரவிடாதது சட்டப்படியானது அல்ல. தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து, நான் கேட்ட தகவல்களை அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு:
உதவி பொறியாளர் பணியில் சேர்ந்த தேதி, அவரது கடன், சம்பளம் போன்ற விபரங்களை, மனுதாரர் கோரி உள்ளார். அரசு ஊழியரின் சொத்து, கடன் விபரங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம்; பொதுமக்களின் பரிசீலனையில் இருந்து அவற்றை பாதுகாக்க முடியாது. ஆனால், நியாயமான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். பணியில் சேர்ந்த தேதி, பதவி உயர்வு தேதி, பணியின் தன்மை போன்ற அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு ஏற்படாத தகவலை தெரிவிக்கலாம்.
சில தகவல்களை தெரிவிக்காமல், பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால், பணி பதிவேட்டில் உள்ள தகவல்களை பரிசீலித்து, அவை எதற்காக தேவைப்படுகிறது என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தகவலையும் வழங்குவதற்கு மறுக்க முடியாது. எந்த தகவலாவது வழங்க மறுத்தாலோ, அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் கோரிய தகவல், அரசு ஊழியரின் தனிப்பட்ட தகவல் தொடர்பானது என்பதால், அதற்கு சட்டத்தில் விலக்கு இருப்பதாக, மாநில தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதை என்னால் ஏற்க முடியவில்லை.
பணியில் சேர்ந்த தேதி, இடமாறுதல் விபரம், ஊக்க ஊதியம், விடுமுறை மற்றும் தண்டனை பெற்ற விபரங்கள் பணி பதிவேட்டில் இருக்கும்.
பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு பெறும் வயது விபரங்கள் எல்லாம் தனிப்பட்ட தகவல் அல்ல; மேலும், சொத்து, கடன் விபரங்களும் தனிப்பட்டவை அல்ல. தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அதை தனிப்பட்டதாக கருதலாம்.
ஏனென்றால், அதை வெளிப்படுத்துவதன் வாயிலாக, அந்த அரசு ஊழியருக்கு களங்கம் ஏற்படும். ஆனால், அரசு பணியில் சேருவதை ஒருவர் ஏற்கும் போது, பொது வெளியில் அவர் இருப்பதையும் ஏற்க வேண்டும்; அவரது பணி குறித்த விபரங்களை, பொது மக்கள் கோருவதை தவிர்க்க முடியாது.
எனவே, மாநில தகவல் ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்தப் பிரச்னையை புதிதாக பரிசீலிக்க, மீண்டும் மாநில தகவல் ஆணையருக்கு அனுப்பப்படுகிறது. அதை இரண்டு மாதங்களில் பைசல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.