கைதிகள் மட்டும் வழுக்கி விழும் காவல் நிலைய கழிப்பறைகள் போலீசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கைதிகள் மட்டும் வழுக்கி விழும் காவல் நிலைய கழிப்பறைகள் போலீசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
ADDED : மே 16, 2025 12:19 AM
சென்னை:'தமிழக காவல் நிலைய கழிப்பறைகள், குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளனவா' என, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், 'இத்தகைய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரத்தில், கடந்த மார்ச் 11ல், ரவுடி ராஜா என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மறுநாள் என் மகன் ஜாகிர் உசேனை, காஞ்சி தாலுகா போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
வாலாஜா காவல் நிலையத்தில், நான்கு நாட்கள் விசாரணையில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில், என் மகனின் இடது கால், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் ஏற்பட்ட படுகாயங்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி, கடந்த மாதம், 28ல் அளித்த மனு, சிறை அதிகாரிகளால் பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, என் மனுவை பரிசீலித்து, அரசு மருத்துவமனையில் மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கைது செய்யப்பட்ட நபருக்கு, எவ்வாறு காயம் ஏற்பட்டது' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 'கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மனுதாரரின் மகனே வாக்குமூலம் அளித்துள்ளார். காயத்துக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது' என்று பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தமிழக காவல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள், கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து, காயம் ஏற்படும் வகையில் உள்ளனவா; அந்த கழிப்பறைகளை இன்ஸ்பெக்டர்கள் பயன்படுத்துவது இல்லையா; அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்டவர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும்' என்று எச்சரித்தனர்.
மனுதாரரின் மகனுக்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்படி, சிறைத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.