கட்டப்பஞ்சாயத்து, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது வகுப்புவாத, ஜாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
கட்டப்பஞ்சாயத்து, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது வகுப்புவாத, ஜாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ADDED : பிப் 23, 2024 06:33 AM
மதுரை : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடந்த கட்டப்பஞ்சாயத்து, ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க டி.எஸ்.பி., பதவிக்கு குறையாத ஒருவரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இப்பிரச்னையில் கவனம் செலுத்தாவிடில் வகுப்புவாத மற்றும் ஜாதி மோதல்களுக்கு வழிவகுக்கும். கடும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளது.
தென்காசி மாவட்டம்விஸ்வநாதபேரி மதிவாணன் தாக்கல் செய்த மனு: ராஜசிங்கம் என்பவரின் தந்தை 2022 மார்ச் 18ல் இறந்தார். இறுதிச் சடங்கிற்கு நண்பர்களுடன் சென்றேன். சிலர் எதிர்ப்புத் தெரிவித்து, தகாத வார்த்தைகளால் திட்டினர். என்னையும், நண்பர்களையும் வெளியேற்றாவிடில் இறுதிச்சடங்கிற்கு ஒத்துழைக்க மாட்டோம் என ராஜசிங்கத்திடம் வற்புறுத்தினர். மறுநாள் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மன்னிப்புக் கேட்கும்படி கூறினர்.
எனது தரப்பை சேர்ந்த அண்ணாசாமி கிராம மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு கோரினார். அபராதம் ரூ.10 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதுபோல் செய்யுமாறு ஞானசகேர் என்பவரிடம் கூறினர். அவர் மறுத்ததால் கிராமத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். சிலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிவகிரி போலீசார் வழக்கு பதிந்தனர். புகாரின் பேரில் எங்களுக்கு எதிராக போலீசார் பொய் வழக்கு பதிந்தனர்.
வழக்கில் தொடர்புடையவர்கள் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள். சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
சிவகிரி அருகே ராயகிரி சீனிவாசன் தாக்கல் செய்த மனு: பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன். குடிநீர் இணைப்பு, குடிநீர் வரியை குறைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வலியுறுத்தி ராயகிரி பேரூராட்சி முன் 2015 ஜூலை 17 ல் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். சிலர் மிரட்டினர். சிவகிரி போலீசில் புகார் அளித்தேன். ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக என்னை மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஊரிலிருந்து விலக்கி வைத்தனர். கிராம மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தினர். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சிலர் மீது வழக்கு பதிந்தனர். எங்களுக்கு எதிராக போலீசார் பொய் வழக்கு பதிந்தனர்.
மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.,தென்காசி கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப்: இந்தியா 1947 ல் சுதந்திரம் அடைந்தபின், இந்நாட்டின் தலைவர்கள் அரசியல் நிர்ணய சபையை உருவாக்கினர். அதன் மூலம் அரசியலமைப்பை உருவாக்கினர். அதை ஏற்று நாடு குடியரசாக மாறியது. சக குடிமக்களை அடிமைகளாகக் கருதி, கட்டப் பஞ்சாயத்து நடத்தும் பழைய நடைமுறை அரசியலமைப்புச் சட்டம் தோன்றிய நாளிலிருந்து காலாவதியாகி விட்டது. சட்டத்தை நிர்வகிக்க நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சட்டத்தை அமல்படுத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். தினசரி நிர்வாகம் கலெக்டர், மாவட்ட எஸ்.பி., மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இச்சூழலில் கிராமங்களில் உள்ள ஒரு சிலர் சட்டப்பூர்வ முறைகளால் தேர்ந்தெடுக்கப்படாமல் தங்களை தலைவர்கள் என கருதிக்கொண்டு அங்கு வசிக்கும் மக்களை அடிமைகளாகக் கருதுகின்றனர். வாய்மொழி உத்தரவு மூலம் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து அபராதம் விதிக்கின்றனர்.
ஜாதி அமைப்பால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்து அல்லது ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது, சக குடிமக்களை அடிமைகளாக நடத்துவது, அபராதம் விதிப்பது, நடமாடுவதை தடுப்பது சட்டத்தின் முன் சமத்துவம் என்ற அரசியலமைப்பின் கொள்கைகளை மீறுவதாகும். இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
சிவகிரி போலீசில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணையை வேறொரு விசாரணை அதிகாரிக்கு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.,மாற்ற வேண்டும்.
இது நக்சலைட் பிரச்னையைப் போன்றது. சட்டபூர்வமான வழிமுறைகளால் அங்கீகரிக்கப்படாத போட்டி அரசாங்கத்தை நடத்துவதன் மூலம் தனிப்பட்ட குடிமக்கள் பொதுக் கிணறு, பொதுப்பாதையை பயன்படுத்துவது, மற்றவர்களுடன் இணைந்து வாழும் உரிமையை தடுக்கிறது. இவை கருத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும். இப்பிரச்னையில் கவனம் செலுத்தாவிடில் வகுப்புவாத மற்றும் ஜாதி மோதல்களுக்கு வழிவகுக்கும். கடும் விளைவுகளை ஏற்படுத்தும். உயிரிழப்பு, சொத்து, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
இது உலக நாடுகளில் எதிரொலிக்கும். கட்டப் பஞ்சாயத்து குற்றச்சாட்டை விசாரிக்க டி.எஸ்.பி.,பதவிக்கு குறையாத ஒருவரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., நியமிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.