நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ADDED : ஜூலை 10, 2026 05:24 AM

சென்னை: நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான, 'லுக் அவுட்' நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான, சாலை ஒப்பந்த பணிக்கு, 'டெண்டர்' வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளாமல், 3.23 கோடி ரூபாய் வரை, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் என, 11 பேருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலு மனு தாக்கல் செய்தார். மருத்துவ சிகிச்சைக்காக, வேலு வெளிநாடு சென்ற நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து, லஞ்ச ஒழிப்புத் துறை, 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வேலு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, ஜூலை 28ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.
அதுவரை, மனுதாரருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கக் கூடாது என தெரிவித்த நீதிபதி, ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், எ.வ.வேலுவுக்கு எதிரான, 'லுக் அவுட்' நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
