முடங்கிய மலைவாழ் மக்கள் குடியிருப்பு ரோடு திட்டம்; தொட்டில் கட்டி துாக்கி வரும் அவலம்
முடங்கிய மலைவாழ் மக்கள் குடியிருப்பு ரோடு திட்டம்; தொட்டில் கட்டி துாக்கி வரும் அவலம்
UPDATED : நவ 21, 2024 05:01 AM
ADDED : நவ 20, 2024 10:29 PM

உடுமலை ; உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு ரோடு அமைக்கும் திட்டம் முடங்கியுள்ள நிலையில், உடல் நலம் பாதித்த கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி துாக்கி வந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிப்போர், மருத்துவம், கல்வி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, அப்பர் ஆழியார் வழியாக, 60 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
அதிலும், அவசர மருத்துவ தேவைக்கு, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களை கரடு, முரடான பாதையில், தொட்டில் கட்டி துாக்கி வர வேண்டியுள்ளது. இதனால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம், குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த, இரண்டு மாத கர்ப்பிணியான சுமதிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் தொட்டில் கட்டி, கரடு, முரடான பாதையில் துாக்கி வந்தனர்.
மாலை, 3:00 மணிக்கு, திருமூர்த்திமலைக்கு கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதே நிலை நீடித்து வருவதால், உடனடியாக ரோடு அமைக்கும் பணியை துவக்கி, மலைவாழ் மக்களின் அவல நிலைக்கு தீர்வு காண வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
மலைவாழ் மக்கள் கூறியதாவது:
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான பகுதியில், 60 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டிய நிலையில், திருமூர்த்திமலையிலிருந்து, குருமலை வரை, 5 கி.மீ., துாரம் உள்ள ரோடு அமைத்து தர வேண்டும், என பல ஆண்டாக போராடி வந்த நிலையில், 3 ஆண்டுக்கு முன், வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் ஏற்கனவே பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வழித்தடத்தில், இரு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் அமைக்கும் போது, மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் கிடைக்கும். வனத்துறை ரோந்து பணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வனத்துறை கண்காணிப்பு, கட்டுப்பாடு இருக்கும் என்பதால், வனத்திற்குள் மற்றவர்கள் நுழைய முடியாது. ஆனால், ரோடு அமைக்கும் பணி, ஒரு சில வனத்துறை அதிகாரிகளால், நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மலைவாழ் மக்களுக்கு, உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ரோடு அமைக்கும் பணியை உடனடியாக துவக்க வேணடும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.