மக்களுக்கான முதல்வராக செயல்பட ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
மக்களுக்கான முதல்வராக செயல்பட ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2025 07:24 AM

திருப்பூர்: ''முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் ஓட்டு அரசியலாக பார்ப்பதை தவிர்த்து, நடுநிலையோடு அனைத்து மக்களுக்கான முதல்வராக செயல்பட வேண்டும்,'' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வருகைதராமல், அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விவேகானந்தர் இந்தியாவின் அடையாளம். உலக அரங்கில் இந்தியாவின் ஹிந்து சமயத்தின் புகழை உணர வைத்தவர், உயர வைத்தவர். உலகம் முழுவதிலும் இருந்தும் வெளிநாட்டினர் சுவாமி விவேகானந்தர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவர் தவம் செய்த இடத்தினை தரிசிக்க வருகின்றனர். அவர் தியானம் செய்த பாறையில் மண்டபம் எழுப்ப அரசியல் வேறுபாடு இன்றி அனைவரும் பெரும்பங்கு வகித்தது அழிக்க முடியாத வரலாறு.
அத்தகைய மகான் தவம் செய்த, புனித இடத்தை தரிசிக்க வருவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து உள்ளார்.
இது எத்தகைய ஹிந்து விரோத மனநிலை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதே, விவேகானந்தருக்காக நினைவு மண்டபம் எழுப்பிய குழுவின் தலைவர் ஏக்நாத் ராணடே தான். கடந்த, 1979ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் அதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இந்த வரலாற்றை தி.மு.க., மறைக்க பார்க்கிறது.
கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவரை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் எண்ணம் வியாபாரத்தனம் மட்டும் அல்ல, வள்ளுவரையே இழிவுபடுத்தும் செயல். மேலும், முதல்வரின் இத்தகைய செயல்பாடு சுவாமி விவேகானந்தரை மதிக்கும், நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களை அவமதிக்கும் செயல்.
எனவே, அனைத்தையும் ஓட்டு அரசியலாக பார்ப்பதை தவிர்த்து, நடுநிலையோடு அனைத்து மக்களுக்கான முதல்வராக ஸ்டாலின் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.