'செஸ் ஒலிம்பியாடில் தங்கம் பெற்றது வரலாற்று சாதனை'
'செஸ் ஒலிம்பியாடில் தங்கம் பெற்றது வரலாற்று சாதனை'
ADDED : செப் 25, 2024 01:59 AM

சென்னை:''செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்றது, இந்தியாவின் வரலாற்று சாதனை,'' என, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கூறினார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடந்த, 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆண்கள் அணி, ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் வீழ்த்தி, இரண்டு தங்க பதக்கங்களை வென்று, முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அணிக்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய செஸ் ஒலிம்பியாட் அணி கேப்டன் ஸ்ரீநாத், வீரர் பிக்ஞானந்தா, வீராங்கனை வைஷாலி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், குகேஷ் நேற்று காலையிலும் சென்னை விமான நிலையம் வந்தனர்.
அவர்களுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின், அவர்கள் அளித்த பேட்டி:
கேப்டன் ஸ்ரீநாத்: ரஷ்யாவுடன் இணைந்து விளையாடிய போது, முழுமையாக ஆட முடியாத சூழலில், அந்நாட்டுடன் பதக்கத்தை பகிர வேண்டியதாயிற்று. தற்போது, இந்திய மகளிர் அணியும், ஆடவர் அணியும் அதிக புள்ளிகளுடன், நமக்கான வெற்றியாக மாற்றி உள்ளது. இதனால், செஸ் விளையாட்டில் சிறந்த அணி என்பதை நிரூபித்துள்ளோம்.
குகேஷ்: நடப்பு உலக சாம்பியனான சீன வீரர் டிங் லைரின், என்னோடு விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் வரவில்லை. நம் கேப்டன் ஸ்ரீநாத் வகுத்த வியூகத்தால், நான் முதல் போர்டில் விளையாடினேன்.
அதனால், நானும், எரிகேசியும் வெற்றி பெற முடிந்தது. சென்னையில் கடைசி சுற்றில் தங்கத்தை கோட்டை விட்டோம். அதை தாங்க முடியவில்லை.
அதை உணர்ந்து, அமெரிக்காவுடன் விளையாடி வெற்றி பெற்றோம். இது, இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள், சதுரங்க சங்கங்களின் கூட்டு முயிற்சிக்கு கிடைத்த வெற்றி.
மகளிர் அணி வெற்றியாளர் வைஷாலி: சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடில், சிறு தவறுகளால் தங்கத்தை இழந்து, வெண்கலம் பெற்றோம்.
இப்போதும் ஒரு ஆட்டத்தில் வெற்றியை இழந்த போதும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் கவனமாக விளையாடி, தங்கம் பெற்றோம்.
பிரக்ஞானந்தா: இந்த போட்டிகள் அனைத்துமே கடுமையாக இருந்தன. அமெரிக்காவை வீழ்த்தியதும், பதக்கம் உறுதியாகி விட்டதை உணர்ந்து விளையாடினோம்; உறுதி செய்தோம்.
கடந்த 90 ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட் நடக்கும் நிலையில், முதல்முறை இரு பாலரும் தங்கம் பெற்றுள்ளோம். இது, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.