ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத ஸ்டாலினை வரலாறு மன்னிக்காது: அன்புமணி சாபம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத ஸ்டாலினை வரலாறு மன்னிக்காது: அன்புமணி சாபம்
ADDED : டிச 18, 2025 06:21 AM

சென்னை: தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர் செந்தமிழன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, த.மா.கா., துணைத் தலைவர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்புமணி பேசுகையில், ''தி.மு.க., தமிழகத்தில் சமூக நீதியை குழிதோண்டி புதைத்து விட்டது. பீஹார், தெலுங்கானா, கர்நாடகா மாநில அரசுகள், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளன. ஆனாலும், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று, முதல்வர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
''ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாய பிரச்னை மட்டுமல்ல; தமிழகத்தின் சமூகநீதிக்கான, வளர்ச்சிக்கான பிரச்னை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், 50 ஆண்டுக்கான வளர்ச்சி, 20 ஆண்டுகளில் சாத்தியமாகும்.
''லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் ஜாதி பார்த்து தான் தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்துகிறது. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூகநீதியை நிலைநாட்ட, தி.மு.க.,வுக்கு மனம் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத, முதல்வர் ஸ்டாலினை வரலாறு மன்னிக்காது,'' என்றார்.

