அ.தி.மு.க., ஆட்சியை வரலாறு பேசும்; அவிநாசியில் பழனிசாமி பெருமிதம்
அ.தி.மு.க., ஆட்சியை வரலாறு பேசும்; அவிநாசியில் பழனிசாமி பெருமிதம்
ADDED : செப் 14, 2025 11:59 PM

அவிநாசி; ''அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதை நுாறாண்டு கடந்தாலும் வரலாறு பேசும்'' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.
அவிநாசி, கிழக்கு ரத வீதியில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசாரப்பயணத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மறைந்தாலும், அவரது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நான் முதல்வராக இருந்தபோது, மாநில நிதியிலிருந்து 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கிவைக்கப்பட்டது.
85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., அரசு முறையாக செயல்படுத்தவில்லை. பல கட்ட தடைகளுக்குப் பிறகு தற்போது திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆனாலும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வராமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். நுாறு ஆண்டுகள் கடந்தாலும் இந்த திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என வரலாறு பேசும்.
விலையை கட்டுப்படுத்தி ரேஷன் கடையில் முறையான பொருட்களை வழங்க முடியாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தது அ.தி.மு.க.,; ஊழலின் ஊற்றுக்கண்ணாக தி.மு.க., அரசு திகழ்கிறது. கடந்த 52 மாதங்களில் எதையும் கொடுக்காமல் 7 மாதங்களில், 35 லட்சம் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் அந்த குடும்பத்தினரின் ஓட்டுகளுக்காக மட்டுமே.
வீடு இல்லாதோருக்கு கான்கிரீட் வீடுகள் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அவிநாசி பகுதியில் வாழும் விவசாயம், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அருந்ததியர் மக்களில் வீட்டுமனை இல்லாதவர்கள், கூரை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடு கட்ட இடங்களை வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். வரும் தேர்தல் அறிக்கையில் முதன்மையாக இந்த திட்டம் இருக்கும். இவ்வாறு, பழனிசாமி பேசினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், விவசாயப் பிரிவு துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார், அவிநாசி தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், நகரச் செயலாளர் ஜெயபால், நகரத் துணைச் செயலாளர் மூர்த்தி, அவிநாசி தெற்கு ஒன்றிய ஜெ., பேரவை தலைவர் பூபதி,தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் காவிரி ரமேஷ், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.