வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த ஓட்டல் ஊழியர் கைது ரூ.500, 200 நோட்டுகள் பறிமுதல்
வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த ஓட்டல் ஊழியர் கைது ரூ.500, 200 நோட்டுகள் பறிமுதல்
ADDED : செப் 07, 2025 01:33 AM

தென்காசி:ஜெராக்ஸ் மெஷின் மூலம் வீட்டில் கள்ள நோட்டை தயாரித்து புழக்கத்தில் விட்ட ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம், அழகாபுரியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு (26). பட்டதாரியான இவர் தென்காசியில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தனது வீட்டில் ஜெராக்ஸ் மெஷின் மூலம் ரூ.500, ரூ.200 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கடந்த 6 மாதங்களாக அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளார்.
இவருடன் மேலும் 4 நண்பர்களும் இணைந்து கள்ள நோட்டுகளை விநியோகித்து வந்தனர்.
மணிகண்ட பிரபுவின் நண்பர் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அவரிடம் ஜீ பே மூலம் ரூ.10,000 கடனாக பெற்றதை, பின்னர் மணிகண்ட பிரபு ரொக்கமாகக் கொடுத்துள்ளார்.
அதை வங்கி டெபாசிட் இயந்திரத்தில் செலுத்தியபோது, கள்ள நோட்டுகள் எனக் கருதி இயந்திரம் ஏற்கவில்லை.
இதுகுறித்து மணிகண்ட பிரபுவிடம் நண்பர் கேட்டபோது, அவர் தவிர்க்கும் விதமாக பதில் அளித்ததால், அந்த நபர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆலங்குளம் எஸ்.ஐ... சத்தியவேந்தன் தலைமையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் ஜெராக்ஸ் மெஷின், ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்படும் வெள்ளிக் கம்பிகள், ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் ரூ.7000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்ட மணிகண்ட பிரபுவின் 4 நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.