'சிங்கிள் ரூம்' வீடுகள் கட்ட வீட்டுவசதி வாரியம் திட்டம்
'சிங்கிள் ரூம்' வீடுகள் கட்ட வீட்டுவசதி வாரியம் திட்டம்
ADDED : அக் 17, 2024 11:13 PM
சென்னை:கல்வி, வேலைக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் தனி நபர்கள் தங்குவதற்காக, ஒற்றை அறை வீடுகளை கட்டுவதற்கான வழிமுறைகளை, வீட்டுவசதி வாரியம் ஆராய்ந்து வருகிறது.
உயர் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக, சென்னைக்கு வருவோர், மேன்ஷன், விடுதிகளில் தங்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், ஒற்றை அறை வீடுகளை வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி வாரியம் சார்பில், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் இத்தகைய வீடுகள் கட்டப்பட்டன. கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட சில இடங்களில், இதற்கான கட்டடங்கள் இருந்தன.
இவை சிதிலமடைந்த நிலையில், தற்போது படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலாக, புதிதாக ஒற்றை அறை வாடகை வீடுகள் கட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், 'ஸ்டூடியோ அபார்ட்மென்ட்' என்ற பெயரில் ஒற்றை அறை வீடுகளை கட்டி விற்பனை செய்கின்றன. 300 சதுர அடியில் இருக்கும் இந்த வீடுகளில், அறைகளுக்கான தடுப்பு, பிரிப்பு எதுவும் இருக்காது.
இதை வாங்குவோர், தங்கள் தேவைக்கு ஏற்ப, தற்காலிக தடுப்பு மற்றும் பிரிப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையை கடைப்பிடித்து, வாரிய திட்ட பகுதிகளில் இதுபோன்ற வீடுகளை கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
புதிய வீடுகள் கட்டுவதா அல்லது விற்காமல் உள்ள வீடுகளை மாற்றம் செய்து, வாடகைக்கு விடுவதா என்று ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.