மொபைல் போனில் மூழ்கினால் பாதுகாப்பு பணி எப்படி நடக்கும்? போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
மொபைல் போனில் மூழ்கினால் பாதுகாப்பு பணி எப்படி நடக்கும்? போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
ADDED : டிச 22, 2024 01:31 AM
சென்னை:திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே நடந்த படுகொலை சம்பவத்தில், கடமை தவறிய போலீசாருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகில், மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
போலீஸ் தரப்புக்கு பல கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், சம்பவம் குறித்தும், நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, நேற்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகினர்.
சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் போலீஸ் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருநெல்வேலி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலான மனுவை, வழக்கறிஞர் சந்திரசேகர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்ற நுழைவாயில் அருகே சம்பவம் நடந்துள்ளது. நுழைவாயிலில், 12 போலீசார் பணியில் இருந்ததாக கூறுகிறீர்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சீருடையில் இருப்பவர்கள் சத்தம் எழுப்பி, குற்றவாளிகளை நோக்கி ஓடியிருக்கலாம். அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பது போலீசாரின் கடமை. ஒரு சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் தான் விரட்டி சென்று, ஒருவரை பிடித்துள்ளார்; அவரை பாராட்டுகிறோம். மற்றவர்கள் என்ன செய்தனர்?
குற்றத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயற்சிக்காமல் இருந்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை? நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள், வழக்காடிகள், ஊழியர்கள், நீதிபதிகள், சாட்சிகள் வருகின்றனர். இப்படி நீதிமன்றம் அருகில் சம்பவம் நடந்தால், சாட்சிகள் எப்படி பயமின்றி வருவர்?
சம்பவம் நடந்த இடம் கவலை அளிப்பதாக உள்ளது. போலீசார் மத்தியில் மன உறுதியை வளர்க்க வேண்டும். பணியில் இருக்கும் போலீசார் பலர், மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர். போனில் ஏதாவது ஒரு காட்சியை பார்த்து, அதில் மூழ்கி இருந்தால், எப்படி பாதுகாப்பு பணி நடக்கும்?
மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற பணியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் யாராவது பணியில் இருக்கும் போது போன் பயன்படுத்துவதை பார்த்துள்ளீர்களா?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ''நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது; புலன் விசாரணை நடக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ''ஒருவரை தவிர மற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த போது, ஒருவரை விரட்டி பிடித்ததும் போலீஸ் தான். போலீசார் பெரும்பாலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்,'' என்றார்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் வரை, இடைக்காலமாக மாவட்ட நீதிமன்றங்களில், முக்கியமான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சம்பவத்தின் போது கடமை தவறிய போலீசார் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க, திருநெல்வேலி போலீஸ் ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. குற்றவாளி ஒருவரை பிடித்த சிறப்பு எஸ்.ஐ., உய்கொண்டானுக்கு பரிசு வழங்க வேண்டும்; அவரை பாராட்டுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை ஜனவரி 7க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.