பங்கு சந்தையில் பயங்கர சரிவு: பறிபோனது ரூ.14 லட்சம் கோடி
பங்கு சந்தையில் பயங்கர சரிவு: பறிபோனது ரூ.14 லட்சம் கோடி
ADDED : ஏப் 08, 2025 06:46 AM
மும்பை : பங்கு சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டதை அடுத்து, 14 லட்சம் கோடி ரூபாய் இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். டாடா குழும நிறுவனங்கள் உட்பட, பல பெரிய நிறுவனங்களின் பங்கு விலையில் அதிக அளவில் சரிவு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, பரஸ்பர வரி விதிப்பதாக கடந்த 2ம் தேதி அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்க இருப்பதாக சீனா அறிவித்தது. ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளும் பதிலடி வரி விதிக்க தயாராகி வருகின்றன. இது, உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு கொண்டு சென்றுவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டதால், சர்வதேச அளவில் பெரும்பாலான பங்கு சந்தைகள் தள்ளாட்டம் கண்டன. இதற்கு இந்திய சந்தைகளும் தப்பவில்லை.
மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 4,000 புள்ளிகளும்; தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிப்டி 1,200 புள்ளிகளும் சரிவை கண்டன.
உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி, ஐ.டி., வாகனத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிவை கண்டன.
இருப்பினும், வர்த்தக முடிவில் சிறிது மீண்டு, சென்செக்ஸ் 2,226 புள்ளிகளிலும்; நிப்டி 742 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. இந்த கரடியாட்டத்தால், முதலீட்டாளர்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

