பருவமழை நன்றாக பெய்ததால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு
பருவமழை நன்றாக பெய்ததால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஆக 30, 2025 06:07 AM
சென்னை : தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால், மின்வாரிய நீர் மின் நிலையங்களில், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே, 271 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே கால கட்டத்தில் இருந்ததை விட, 110 கோடி யூனிட் அதிகம்.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில், மின்வாரியத்திற்கு, 2,323 மெகாவாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன.
இவற்றுக்கு அருகில் உள்ள அணைகளில், மழை காலத்தில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அதை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூனில் துவங்கிய, தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, மின் வாரிய நீர் மின் நிலையங்களின் அணைகளுக்கு, தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது.
அதை பயன்படுத்தி, நீர் மின் நிலையங்களில் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவில் உள்ள, 12 நீர் மின் நிலையங்களில், முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டது.
தற்போது, அணைகளில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் இருப்பதால், தினமும், 2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் நேற்று முன்தினம் வரை, 271 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதுவே, முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில், 161 கோடி யூனிட்களாக இருந்தது.
எனவே, முதல் ஐந்து மாதங்களிலேயே கூடுதலாக, 110 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீர் மின் நிலையங்களில், இந்த நிதியாண்டில், 482 கோடி யூனிட் நீர் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் ஐந்து மாதங்களிலேயே, 271 கோடி யூனிட் மின் உற்பத்தியாகி உள்ளது.
எனவே, இந்த நிதியாண்டில் மத்திய மின்துறை நிர்ணயித்துள்ள அளவை விட, அதிகளவில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.