நான் தேனியில் போட்டியிட வாய்ப்புள்ளது: விஜயபிரபாகரன்
நான் தேனியில் போட்டியிட வாய்ப்புள்ளது: விஜயபிரபாகரன்
ADDED : மார் 10, 2024 11:30 PM

தேவதானப்பட்டி : ''நான் தேனி லோக்சபா தொகுதியில் கூட போட்டியிட வாய்ப்புள்ளது''என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசினார்.
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியில் நடந்த தே.மு.தி.க., பிரமுகர் இல்ல விழாவில் பங்கேற்ற விஜயபிரபாகரன் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம். நமது வெற்றி முரசு, நாளைய தமிழக அரசு. தமிழகத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., என இரு கட்சியினரும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணம் சுரண்டி வளமாக உள்ளனர். தே.மு.தி.க.,வுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை, தைரியத்துடன் தேர்தலை சந்திப்போம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பலமுறை முதல்வராக இருந்தவர். உதயநிதி தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதல்வர். அண்ணாமலைக்கு, பா.ஜ., கட்சி உள்ளது. நமக்கு அரசியல் பின்புலம் இல்லை. இருந்தாலும் தொண்டர்கள், மக்கள் நம்மீது வைத்துள்ள சக்தியால் தே.மு.தி.க., வெற்றி பெறும்.
நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கினால் 5 ஆண்டுகள் பாழாகிவிடும். அந்தப்பணம் 5 மணி நேரத்தில் கரைந்துவிடும்.
எனவே ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்கின்றனர். ஏன், நான் தேனி லோக்சபா தொகுதியில் கூட போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளது. அதுகுறித்து தலைமை முடிவெடுக்கும் என்றார்.
மின்தடை
விழாவில் விஜயபிரபாகரன் பேச துவங்கியதும் மதியம் 3:20 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. இந்நேரம் மின்தடை ஏற்படுமா என கேட்டார். தொண்டர்கள் ஏற்படாது என்றனர். பின் 'மின்தடை ஏற்படுத்துகின்றனர். இதுவே நமது வெற்றி' என தெரிவித்தார். 3:50 மணிக்கு மின்சாரம் வந்ததும் தொடர்ந்து பேசினார்.

