ADDED : ஏப் 15, 2025 01:10 AM
சென்னை : ''எனக்கு சொந்தமாக மூளை இருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
பா.ஜ., கூட்டணிக்கு என்னை ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள். எனக்கு யாரும் வழிகாட்டவோ, அறிவுறுத்தவோ அவசியம் இல்லை. எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது; சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது. நான் என்ன நினைக்கிறேனோ, அதை தான் செய்வேன்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பீர்களா என, திரும்ப திரும்ப கேள்வி எழுப்புவதை வெறுக்கிறேன். எந்தத் தேர்தல் என்றாலும், நான் தனித்து தான் போட்டியிடுவேன்.
திரும்ப திரும்ப அதை சொல்லிக் கொண்டிருக்க முடியாது; தேவையும் இல்லை. வேற கேள்வி இருந்தால் கேளுங்கள். என்னையும் கொண்டு போய், கூட்டணி சாக்கடையில் தள்ளுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். கூட்டணி வாயிலாக கிடைப்பதெல்லாம் தற்காலிக வெற்றி தான். அதற்காக, நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என் கால்களை நம்பித்தான், எப்போதும் என் பயணம் இருக்கும்.
பா.ஜ., கட்சிக்கு நல்லது எதுவோ, அதை அவர்கள் செய்வர். அந்த வகையில் தான், அவர்களுக்கான புதிய தலைவரை தேர்வு செய்துள்ளனர். இதில், கருத்து சொல்ல என்ன இருக்கிறது?
தேவையானால், புதிய தலைவருக்கு வாழ்த்துதான் சொல்ல முடியும். அதனால், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.