ADDED : செப் 30, 2024 06:16 AM

சென்னை : “விமர்சனங்களை வரவேற்கிறேன். அவற்றுக்கு பதில் கொடுக்கும் வகையில், என் பணிகளை சிறப்பாக அமைத்துக் கொள்வேன்,” என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
அமைச்சர் உதயநிதியை, துணை முதல்வராக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களுக்கு நேற்று சென்று மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அப்போது உதயநிதி அளித்த பேட்டி: துணை முதல்வர் என்ற புதிய பொறுப்பை முதல்வர் எனக்கு கொடுத்துள்ளார்; முதல்வருக்கு நன்றி. இது பதவி அல்ல; கூடுதல் பொறுப்பு. மக்களுக்கு கூடுதலாக உழைப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார். நிறைய பேர் வாழ்த்து தெரிவித்துஉள்ளனர்; அவர்களுக்கு நன்றி. நிறையப் பேர் விமர்சனம் செய்துள்ளனர்; அதற்கும் நன்றி.
அனைத்து விமர்சனங்களையும் வரவேற்கிறேன். வாழ்த்துகளை உள்வாங்கிக் கொள்வது போல, விமர்சனங்களையும் உள்வாங்கி, தவறுகளை திருத்திக் கொள்வேன். இளைஞர் அணி செயலராக பொறுப்பு கொடுத்த போதும், அமைச்சர் பதவி வழங்கிய போதும் விமர்சனங்கள் வந்தன. என் பணிகள் வழியாகத்தான் அதை நியாயப்படுத்த முடியும்.
முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின்படி, என் பணிகள் இன்னும் சிறப்பாக அமையும். விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில், என் பணிகளை சிறப்பாக அமைத்துக் கொள்வேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.