sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீக்கியவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க...மாட்டேன் :ஒற்றுமை பேச்சுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி

/

நீக்கியவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க...மாட்டேன் :ஒற்றுமை பேச்சுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி

நீக்கியவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க...மாட்டேன் :ஒற்றுமை பேச்சுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி

நீக்கியவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க...மாட்டேன் :ஒற்றுமை பேச்சுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி

51


UPDATED : பிப் 24, 2025 01:31 AM

ADDED : பிப் 23, 2025 11:57 PM

Google News

UPDATED : பிப் 24, 2025 01:31 AM ADDED : பிப் 23, 2025 11:57 PM

51


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'கட்சி ஒன்றிணைய வேண்டும்' என்ற ஒற்றை குறிக்கோளோடு, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுக்கும் பல முனை அழுத்தங்களையும் மீறி, தன் முடிவில் தீர்க்கமாக இருப்பதை, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி. அதில், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்கவே மாட்டேன் என்பதையும், சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால், ஒற்றுமை பேச்சுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளதாக அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டதால், தனிக்கட்சி நடத்தும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஒன்றிணைத்து, மீண்டும் ஒன்றுபட்ட அ.தி.மு.க., உருவாக வேண்டும் என, பொதுச்செயலர் பழனிசாமிக்கு, சமீப நாட்களாக பல முனைகளில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

அதற்கு கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்விகள் காரணமாகவும் காட்டப்படுகின்றன. ஆனாலும், பழனிசாமியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

'ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு நிற்க முடியாது' என, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் காட்டமாக குறிப்பிட்டு, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை, மீண்டும் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதை, சூசகமாக தெரிவித்துள்ளார்.

சீர்குலைப்பு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கட்சியினருக்கு பழனிசாமி எழுதியுள்ள கடிதம்:

எப்போது தேர்தல் வரும்; ஜெயலலிதா அரசை மீண்டும் அமைக்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

பெண்களுக்காகவும், ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், ஜெயலலிதா கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை எல்லாம், தி.மு.க., அரசு சீர்குலைத்து நிறுத்தி விட்டது.

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மத்திய அரசு, நிதி நெருக்கடியை கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும், இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

ஜெயலலிதா அரசை நிதி நெருக்கடிக்கு தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், தி.மு.க., அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

எனினும், தன் நிர்வாகத் திறமையால், அனைத்து சவால்களையும் சமாளித்து, ஏராளமான நலத்திட்டங்களை, ஜெயலலிதா தமிழக மக்களுக்கு வழங்கினார்.

வாய்ப்பூட்டு


இன்று தி.மு.க., அரசு, இரு மொழி கொள்கையை காப்பாற்ற திறனற்றதாக உள்ளது. தமிழகம் முழுதும், பெண் குழந்தைகள், தாய்மார்கள், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியபடி உள்ளன. சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உண்மைகளை எடுத்து சொல்வோருக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது. இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும்.

தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைந்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்கு ஒரே தேர்வு, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.

இன்று கொள்கை வீரர்களின் கூடாரமாக அ.தி.மு.க., திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும், கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்த, திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும், காகித ஓடம் போல கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியாது. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகாது.

விசுவாசியும், துரோகியும், தோளோடு தோள் நிற்க முடியாது. அ.தி.மு.க., தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக்கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப் போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

வார்த்தை ஜாலம் எடுபடாது!


சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது, தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. தேர்தலின் போது, பா.ஜ.,வுடன் கூட்டணி பற்றி பேசுவதற்கு முடிவு செய்யப்படும். அ.தி.மு.க.,வில் உள்ள துாய்மையான தொண்டர்கள் எந்த காலத்திலும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டார்கள். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பேச்சு மற்றும் கருத்துக்கள், வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே பயன்படும்; நடைமுறை அரசியலுக்கு எடுபடாது.

- பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்

ஓரணியாக திரளுவோம்!


தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அ.ம.மு.க., உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பலப்படும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஓரணியாக திரண்டு, 2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவோடு, தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.

- தினகரன்,

பொதுச்செயலர், அ.ம.மு.க.,






      Dinamalar
      Follow us