கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தி.மு.க.,வை தோலுரிப்பேன் 'சாட்டையடி' நிகழ்வுக்கு பின் அண்ணாமலை சூளுரை
கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தி.மு.க.,வை தோலுரிப்பேன் 'சாட்டையடி' நிகழ்வுக்கு பின் அண்ணாமலை சூளுரை
ADDED : டிச 28, 2024 03:49 AM

கோவை: ஆறுமுறை சாட்டையை சுழற்றி தன்னைத் தானே அடித்துக் கொண்ட பா.ஜ., தலைவர் அண்ணா மலை, ''கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தி.மு.க.,வை தோலுரிப்பேன்,'' என தெரிவித்தார்.
ஏற்கனவே அறிவித்திருந்தபடி, கோவை காளப்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன், தொண்டர்கள் முன்னிலையில், சட்டை அணியாத தன் உடம்பில், ஆறுமுறை சாட்டையால் அடித்துக் கொண்டார் அண்ணாமலை.
ஏழாவது முறையும் அவர் சாட்டையை சுழற்ற, கூடி நின்ற தொண்டர்கள், 'தலைவரே போதும்' என்று சொல்லி ஓடோடி வந்து அண்ணாமலையை கட்டி அணைத்தனர்; 'இனியும் அடித்துக்கொள்ள விட மாட்டோம்' என்று சொல்லி தடுத்தனர்.
அழகல்ல
இந்த நிகழ்வின் போது வீட்டு வாசலில் கூடியிருந்த தொண்டர்கள், 'வெற்றிவேல்... வீரவேல்...' என கோஷமிட்டனர்.
இதன்பின், அண்ணாமலை அளித்த பேட்டி.
கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வி, பொருளாதாரம் பின்தங்குகிறது. தமிழகத்தில் பெண்கள், தாய், குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன.
சென்னை அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கில், காவல் துறை மீது நடவடிக்கை திருப்தியாக இருப்பதாக கமிஷனர் சொல்லியிருப்பது, கண்ணியமிக்க பதவிக்கு அழகல்ல. இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து செல்ல முயற்சிக்கிறது காவல் துறை. எப்.ஐ.ஆர்., லீக் ஆக வாய்ப்பே இல்லை.
அந்த தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது. அந்த பெண்ணின் வாழ்க்கையையே, ஏழு தலைமுறைக்கு நாசம் செய்து விட்டனர். காக்கி உடையின் மீது தான் என் கோபம். சுதந்திரமாக நடவடிக்கை எடுக்காமல், அவர்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன.
உடலை வருத்தி ஒரு செயலை செய்யும்போது, அதற்கான பலன் இருக்கும். இது, எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் சாட்டையடி என்பதை விட, சமுதாயத்தில் இருக்கும் அவலங்களுக்கானது. தனிமனித வெறுப்போ, தி.மு.க., மீதான வெறுப்போ கிடையாது.
முறையீடு
மக்களுக்கு எதிரான தி.மு.க., ஆட்சி போக வேண்டும்; ரொம்ப தவறு செய்கின்றனர். அறவழியில் போராட்டம் நடத்த முடியவில்லை; பேச முடியவில்லை.
முருக பெருமானிடம், நான் உடம்பில் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆறு சாட்டையடிகளை சமர்ப்பிக்கிறோம்; தொடர்ச்சியாக விரதம் இருக்கப் போகிறோம்.
வேகமான அரசியல் பணி செய்யப் போகிறோம். ஆண்டவனிடம் முறையிடுகிறோம். கிடைக்கும் எல்லா மேடைகளிலும், தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப் போகிறோம்.
தி.மு.க., ஆட்சியிலிருந்து அகலும்வரை, காலணி அணியப் போவதில்லை. தமிழக மக்களுக்காக, இதை வேள்வியாக, தவமாக செய்கிறோம். கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கடுமையாக உழையுங்கள்; களத்தில் இருங்கள்.
நம்பிக்கை
தேர்தல் தோல்வி பெருமைதான். சொந்த காசில் செலவு செய்து ஓட்டு வாங்கியுள்ளேன். சாராயம் விற்று, பஞ்சாமிர்தத்தில் கமிஷன் பெற்று வரவில்லை. 2026ல் தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். தமிழ் சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும். மக்கள் மீதுதான் என் நம்பிக்கை.
எல்லா பதவிகளும், வெங்காய பதவிகள் தான்; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. அடிப்படையில் எல்லாரும் தொண்டர்கள். பொறுப்பு வரும்; போகும். லண்டன் போய் வந்தபின், முன்பைக் காட்டிலும் கூடுதல் நல்லவனாக இருக்க விரும்புகிறேன்.
என்ன செய்ய வேண்டும் என்பதில் என் பாதை தெளிவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

