தமிழகத்தில் பணியாற்ற ஐ.ஏ.எஸ்.,கள் விரும்பவில்லை * ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பணியாற்ற ஐ.ஏ.எஸ்.,கள் விரும்பவில்லை * ராமதாஸ் குற்றச்சாட்டு
ADDED : பிப் 12, 2025 07:31 PM
சென்னை:'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற விரும்பாத நிலை உள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட, 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த ஜனவரி 31ல், 31 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில், 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேவையற்றது.
கடந்த ஜூலையில், சுற்றுச்சூழல் துறை செயலராக இருந்த சுப்ரியா சாஹு, மருத்துவ துறைக்கும், மருத்துவ துறை செயலராக இருந்த செந்தில்குமார், சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றப்பட்டனர். இப்போது, மீண்டும் அவர்கள் பழைய துறைகளுக்கே மாற்றப்பட்டுள்ளனர். இதுபற்றி, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார். மேலும் பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் மத்திய பணிக்கு செல்ல விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தமிழகத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. இது நல்ல அறிகுறி அல்ல.
ஒரு துறைக்கு செயலராக வருபவர், அத்துறை குறித்து முழுதும் அறிய குறைந்தது, இரு மாதங்கள் தேவை. அதற்குள் இடமாற்றம் செய்தால், அரசு நிர்வாகத்தின் செயல் திறன் பாதிக்கப்படும். எனவே, இத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
டிஜி.பி.,க்கு இரண்டு ஆண்டு பணிக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, அரசு துறை செயலர் பதவிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் பணிக் காலத்தை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.